ஜெயலலிதாவை மருத்துவமனையில் தான் நேரில் பார்க்கவில்லை என்று இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய சம்மனின் பேரில் இன்று ஆஜரான இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.தலைமைச் செயலதிகாரியுமான விவேக் ஜெயராமனிடம் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்றும் விவேக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக், மீண்டும் வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.