கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது போல் அதிமுக அரசும் கவிழும்... நாங்கள் நினைத்தால் இன்றே அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டல் தொனியில் பதிலடி கொடுத்துள்ளார்.நாங்கள் ஒன்றும் குமாரசாமி போல் ஏமாந்தவர்கள் அல்ல... நாங்கள் மோசமானவர்கள் ... அதிமுக அரசு மீது கை வைத்தால் தெரியும் சங்கதி என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவருக்கு ஒருவர் லாவணி பாடியது போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நேற்று பிரச்ச்சாரம் தொடங்கிய முதல் நாளிலேயே வார்த்தைப் போரை ஆரம்பித்து விட்டனர்.
வேலூர் கே.வி.குப்பத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, ‘நாங்கள் நினைத்தால் அதிமுக அரசை இன்றே கவிழ்க்க முடியும்.கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது போல், அதிமுக அரசும் விரைவில் கவிழும்’ என்று ஸ்டாலின் பேசியிருந்தார்.
மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமது வழக்கமான மிரட்டல் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.வேலூரில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ‘‘குமாரசாமி போல் நாங்கள் ஒன்றும் ஏமாந்தவர்கள் அல்ல. நாங்கள் ரொம்ப மோசமானவர்கள். எங்கள் ஆட்சியை தொட்டுப் பார்த்தால் நடப்பதே வேறு’’ என்று ராஜேந்திர பாலாஜி மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்து தீவிரவாதம் என பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலின் நாக்கை அறுப்பேன் என்றவர்தான் ராஜேந்திர பாலாஜி. அது மட்டுமின்றி, ‘எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கையெழுத்து போட்டால் விரலை துண்டிப்பேன்’ என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான அறந்தாங்கி ரத்தினசபாபதி கூறியிருந்ததற்கு பதிலடியாக, ‘ரத்தினசபாபதியின் கையை வெட்டுவேன்’ என்றும் ராஜேந்திர பாலாஜி 'படு கூலாக' கூறி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். அது மட்டுமின்றி மோடி எங்கள் டாடி என்று உச்சரித்து, எங்களை மேலே (மோடி) இருப்பவன் காப்பாற்றுவான் என்றெல்லாம் மோடிக்கும் ஐஸ் வைப்பதில் ராஜேந்திர பாலாஜி படு கில்லாடியாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தமது வழக்கமான மிரட்டல் பாணியில், நாங்கள் மோசமானவர்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது தமிழக அரசியலிலும், வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரக் களத்திலும் சூடேற்றச் செய்துள்ளது.