அத்திவரதரை தரிசிக்க 31ல் வருகிறார் மோடி

P.M. will visit kanchipuram on 31st july for Atthivaradar dharsan

by எஸ். எம். கணபதி, Jul 29, 2019, 14:58 PM IST

அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 31ம் தேதி காஞ்சிபுரத்திற்கு வருகிறார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரும் வருகின்றனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அந்த கோயிலின் குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

இந்த முறை, வழக்கமான மீடியாக்கள் தவிர, சமூக ஊடகங்களிலும் அத்திவரதர் சிறப்பு மற்றும் பெருவிழா குறித்த செய்திகள் உடனுக்குடன் வெளியாகி வருகின்றன. இதனால், அத்திவரதரை தரிசிக்க தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதுவரை சுமார் 42 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்திவரதரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் ஏராளமான வி.ஐ.பி.க்கள் தரிசனம் செய்துள்ளனர். பிரதமர் மோடியும் அத்திவரதரை தரிசிக்க வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அவர் அத்திவரதரை சயனக் கோலத்திலும், நின்ற கோலத்திலுமாக தரிசனம் செய்ய விரும்புவதாகவும் கூறப்பட்டது.

அத்திவரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் அதன் பின்னர் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் தருவார் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், ஜூலை 23ம் தேதியன்று வருகை தரும் பிரதமர் மோடி, முதலில் அத்திவரதரின் சயனக் கோலத்தையும், அடுத்து அவரது நின்ற கோலத்தையும் தரிசனம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், அதன் பின்பு அத்திவரதர் இம்மாதம் 31–ம் தேதி வரை சயனக் கோலத்திலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்திலும் காட்சி தருவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வரும் 31–ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரும் வருகிறார்கள்.

சயனக் கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை அவர்கள் தரிசிக்கிறார்கள். அதன்பின்பு, பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். இரவு கவர்னர் மாளிகையில் பிரதமர் தங்குகிறார். மறுநாள் ஆகஸ்டு 1ம் தேதி நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தரிசிக்கின்றனர்.

மோடி வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் சத்யபிரகாஷ் நேற்று காஞ்சிபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை எட்டியது

You'r reading அத்திவரதரை தரிசிக்க 31ல் வருகிறார் மோடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை