சென்னை: ஜெ.தீபாவின் வீட்டிற்கு நான் சென்றதற்கும், மாதவனுக்கும் எந்த தொர்பும் இல்லை என போலி அதிகாரி பிரபாகரன் போலீசாரிடம் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரணியின் தலைவரான ஜெ.தீபாவின் வீட்டில் கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரித் துறையில் இருந்து வருவதாக கூறி சோதனையில் ஈடுபட்டார். போலீசார் வருவதை தெரிந்துக் கொண்ட பிரபாகரன் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் பிரபாகரனை தேடி வந்தனர்.
இந்நிலையில், பிரபாகரன் போலீசில் சரணடைந்தார். மேலும், தீபாவின் கணவர் கூறியதால் தான் தீபாவின் வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தேன் என்றும் ஊடகங்கள் திரண்டதை கண்டு அங்கிருந்து தப்பினேன். போலீசார் என்னை தேடுவதை தெரிந்துக் கொண்டதை அடுத்து போலீசில் சரணடைந்தேன் என பிரபாகரன் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால், தற்போது போலீசாரிடம் கிடுக்குப்பிடி விசாரணையில், இந்த விவகாரத்தில் மாதவனுக்கு எந்த தொடர்பும் இல்லை என பிரபாகரன் பல்டி அடித்துள்ளார். எனக்கு பங்கு சந்தையில் ரூ.20 லட்சம் கடனை அடைக்கவே, தீபாவின் வீட்டிற்கு சென்ற பணம் பறிக்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், வழக்கறிஞர் ஒருவரின் அறிவுரைப்படியே, மாதவனே காரணம் என வீடியோ வெளியிட்டதாகவும் கூறினார். அதேபோல், புதுச்சேரியை சேர்ந்த ஆனந்தவேல் என்பவர்தான் அவருக்கு போலியான அடையாள அட்டையும், வருமானவரித் துறையினரின் வாரண்டையும் தயாரித்து கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், தவறு இல்லாத பட்சத்தில் மாதவன் தலைமறைவாக இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.