நெல்லை முன்னாள் மேயரை கொலை செய்தது ஏன்?- திமுக பெண் பிரமுகர் மகன் பரபரப்பு வாக்குமூலம்

by Nagaraj, Jul 30, 2019, 09:14 AM IST
Share Tweet Whatsapp

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலையை தான் மட்டுமே செய்ததாக திமுக பெண் பிரமுகரின் மகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். திரும்பத் திரும்ப தான் மட்டுமே கொலை செய்ததாக கார்த்திகேயன் கூறுவது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையில் குறைந்தது 3 பேருக்காவது தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்த உமாமகேஸ்வரியும், அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு வேலை பார்த்த பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் கடந்த 23-ந் தேதி படுகொலை செய்யப்பட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் படுகொலை குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.. சொத்துக்காக கொலை நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்களிடமும், நகை, பணமும் கொள்ளை போயிருந்ததால் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதில் ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் தான், அரசியல் பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் நெல்லையைச் சேர்ந்த திமுக மாநில ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினரான சீனியம்மாளிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.கடந்த 1996-ல் நெல்லை மாநகராட்சியாக்கப்பட்டுமேயர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பதவியைப் பிடிக்க, அப்போது நெல்லை மாவட்ட திமுகவில் பொறுப்பில் இருந்த உமா மகேஸ்வரிக்கும், சீனியம்மாளுக்கும் இடையே கடும் போட்டி இருந்துள்ளது. அப்போது, திமுக மேலிடச் செல்வாக்கால் உமாமகேஸ்வரி மேயர் பதவியைக் கைப்பற்றி விட்டார். அது முதலே நெல்லை மாவட்ட அரசியலில் சீனியம்மாளை ஓரம் கட்டும் வேலையையும் உமாமகேஸ்வரி கச்சிதமாக செய்து வந்துள்ளார். 2011-ல் சங்கரன்கோவில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட சீனியம்மாளுக்கு வாய்ப்பு வந்தபோதும் அதனையும் உமாமகேஸ்வரி தட்டிப் பறித்து விட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தேர்தலில் உமாமகேஸ்வரியும் தோற்றுவிட்டர் .

பின்னர் இருவரிடையே சமரசம் ஏற்பட்டு, 2016 சட்டமன்ற தேர்தலின் போது சங்கரன்கோவில் தொகுதியில் சீட் வாங்கித் தருவதாக சீனியம்மாளிடம், உமா மகேஸ்வரி ஒரு பெரும் தொகையை வாங்கியிருந்தாராம். ஆனால் சீட்டும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் உமாமகேஸ்வரி இழுத்தடித்ததால் இருவரிடையே மீண்டும் பகை உருவாகியுள்ளது.

இதனால் சீனியம்மாள் கூலிப்படையை ஏவி, உமா மகேஸ்வரியையும் மற்ற இருவரையும் கொலை செய்ய தூண்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், தமக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொலை வழக்கில் தன்னை சிக்கவைக்க முயற்சி நடப்பதாக சீனியம்மாள் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தான் இந்தக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த அன்று கார்த்திகேயன் தனது ஸ்கார்பியோ காரில் உமாமகேஸ்வரியின் வீடு இருந்த பகுதியில் சுற்றித்திரிந்ததை அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி காட்டிக் கொடுத்தது. மேலும் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் உரையாடல் பதிவுகளை ஆராய்ந்ததிலும் கார்த்திகேயனின் செல்போன் எண் காட்டிக் கொடுத்து விட்டது.

இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் மடக்கினர். விசாரணையில் 3 பேரையும் கொலை செய்ததை கார்த்திகேயன் ஒப்புக் கொண்டாராம். கொலை தொடர்பாக போலீசாரிடம் கார்த்திகேயன் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளாராம். அதில், மகேஸ்வரியால் திமுகவில் தமது அரசியல் வளர்ச்சி தடைபட்டு விட்டதாக எனது தாய் சீனியம்மாள் அடிக்கடி வீட்டில் புலம்பி வருவார். நான் சிறுவனாக இருந்தது முதல், தாயின் இந்த புலம்பலை அடிக்கடி கேட்டு வந்ததால், உமா மகேஸ்வரி மீது எனக்கும் நீண்ட காலமாக வெறுப்பு இருந்து வந்தது. அதனால், உமா மகேஸ்வரியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தேன்.

சம்பவத்தன்று காரை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, உமா மகேஸ்வரியின் வீட்டுக் கதவை தட்டினேன். அவருடைய கணவர் முருகசங்கரன், என்னைப் பார்த்தவுடன் கதவைத் திறக்க மறுத்தார். ஒரு தகவல் சொல்வதற்காக அம்மா அனுப்பி வைத்தார் என்று கூறி வீட்டிற்குள் சென்றேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாமகேஸ்வரியை சரமாரியாக குத்தினேன். தடுக்க வந்த அவருடைய கணவர் முருகசங்கரனையும் தீர்த்துக் கட்டினேன். அலறல் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து ஓடி வந்த பணிப் பெண் மாரியம்மாளையும் கழுத்தை அறுத்து கொன்று விட்டு சாவகாசமாக வெளியேறி காரில் தப்பினேன் என்று கார்த்திகேயன் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம்.

கொலையை தான் மட்டுமே செய்ததாகவும், ஆயுதங்களை ஆற்றில் வீசி விட்டதாகவும் கார்த்திகேயன் கூறி போலீசை குழப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. கொலையை கார்த்திகேயன் மட்டும் செய்திருக்க முடியாது. இதில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனை , இன்று பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதற்கிடையே இந்தக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.அரசியல் பழிவாங்கலுக்காக கொலை நடந்துள்ளதால், உள்ளூர் போலீசுக்கு, அரசியல்வாதிகளால் நெருக்கடி வரலாம் என்பதாலேயே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தக் கொலை வழக்கில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு ; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்


Leave a reply