அத்திவரதர் பற்றி தாம் பேசியதை அரைகுறையாக வெளியிட்டு, தமக்கு எதிராக சிலர் சதிவேலை செய்து வருவதாக சுகிசிவம் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, அத்திவரதர் தரிசனத்துக்கு மக்கள் திக்குமுக்காடுவது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில், சில வினாடிகள் ஓடும் வீடியோவை ‘கட்’ செய்து சமூக வலைதளங்களில் விடப்பட்டு, அது வைரலாகி விட்டது. அதில் சுகி சிவம், ‘‘அத்திவரதப்பா... புத்தி வராதப்பா... இவ்வளவு நாள் நம்ம ஊர் கோயில்களில் இருக்கும் பெருமாளுக்கு இல்லாத பவர், 40ஆண்டுகள் குளத்துக்குள்ளே இருந்த பெருமாளுக்கு வந்திடுமா? இது எவ்வளவு பெரிய சூதாட்டமாக மாறுகிறது. வயதானவர்கள் கூட்டத்தில் நசுங்கி இறக்கிறார்கள், கர்ப்பிணிகள் கூட்டத்தில் நசுங்கித் துன்பப்படுகிறார்கள்... நாம் கஷ்டப்படனும்னு கடவுள் நினைப்பார...
அப்படின்னா அவர் கடவுளா? உண்மையான பக்தியோடு நீங்கள் வணங்கினால் கடவுள் உங்கள் வீட்டுக்கே வருவார்’’ என்று பேசியிருந்தார்.
முன்பு இது போன்று அவர் பல முறை நியாயமான கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்து கொண்டதில்லை. ஆனால், இப்போது யார் என்ன பேசினாலும், ஆன்டி ஹிந்து, ஆன்டி நேஷனல், ஆன்டி இண்டியன் என்றாகி விடுகிறார்களே! அதில் சுகிசிவமும் தப்பவில்லை.
இதையடுத்து, சுகி சிவம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
கடந்த நாற்பதாண்டுகளாக தமிழுக்கும், இந்து சமயத்திற்கும் நான் செய்து வரும் பணியை நாடு நன்கறியும். சிவகாசியில் நான் பேசிய பேச்சில் ஒரு நிமிடம் வெட்டியெடுக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு அது பிரச்னையாக்கப்பட்டு விட்டது. உண்மையில் முழுப் பேச்சையும் கேட்டால், இந்து தர்மத்தின் கர்மயோகம், ஞானயோகம் பற்றி விளக்கி இந்து சமயத்திற்கு மதிப்பு சேர்த்திருப்பது புரிய வரும். இருந்தாலும் சொல்களால் காயப்பட்ட அனைவரிடமும் என் இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்து சமயத்தின் காவல்பணியை வலிவுடன் செய்து வரும் என்னையும், என் பேச்சுக்கு பெருமளவில் கூடும் இந்து சகோதரர்களையும் பிளவுபடுத்தி, என்னை தனிமைப்படுத்தும் சதிவேலையை சிலர் திட்டமிட்டு செய்து வருகிறார்கள் என்று அறிகிறேன். அதனால் காவல்துறை மற்றும் சட்ட உதவியுடன் அவர்களை கண்டறிய முயற்சி செய்து வருகிறேன்.
என்றாலும் என் சொந்த சகோதரர்களாகிய இந்து சமூக நண்பர்களிடம் சண்டையிட எனக்கு சம்மதம் இல்லை. நம் கையைக் கொண்டே நம் கண்ணை குத்த சிலர் முயற்சிக்கிறார்கள். என்றும் போல் இந்து மதத்தி்ற்கு பணி செய்ய விழைகிறேன். சேர்ந்து பணி செய்ய இந்து நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு சுகிசிவம் கூறியுள்ளார்.