பெண்கள் பாதுகாப்பிற்காக “ஹெல்ப் லைன்” தொடங்கியது முதலமைச்சருக்கு பந்தா காட்டுவதற்காக, சாலையில் வரிசையாக பாதுகாப்பிற்கு நிறுத்துவதற்கும் பயன்படுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, நாவலூர் பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடூரமாகத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள கயவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்கும் மேலாக ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ள அவரிடமிருந்து நகைகள், ஸ்கூட்டி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு போராடிய நிலையில் இரக்கமே இல்லாமல் அவரை முட்புதருக்குள் வீசிச்சென்றுள்ள அந்தக் காட்டுமிராண்டிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது, சென்னை மாநகர காவல்துறையின் திறமைக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.
காவல்துறையில் இரவு ரோந்து உள்ளிட்ட “குற்றத்தடுப்பு” பணிகள் இப்போது முறையாக நடக்கின்றதா? அப்படி நடக்கிறது என்றால் மீண்டும் ஒரு இளம் பெண்ணுக்கு இப்படியொரு அதிபயங்கரம் அரங்கேறியது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
பெண்கள் பாதுகாப்பிற்காக “ஹெல்ப் லைன்” தொடங்கியது பற்றியெல்லாம் ஏட்டளவில் பல்வேறு பிரச்சாரங்கள் நடக்கிறதே தவிர, முதலமைச்சருக்கு பந்தா காட்டுவதற்காக, சாலையில் வரிசையாக பாதுகாப்பிற்கு நிறுத்துவதற்கும் பயன்படுகிறது.
அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் விழாக் கொண்டாட்டங்களுக்கு அளவுகடந்த எண்ணிக்கையில் காவலர்களை அனுப்புவதற்கும் தான் உயரதிகாரிகளுக்கு விருப்பம் இருக்கிறதே தவிர, இதுபோன்ற ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.