நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்திற்குத் தேவையான மின்னுற்பத்திக்காக, கடந்த சில ஆண்டுகளாக அயல்நாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்துவருவது அனைவரும் அறிந்ததே ஆகும். இதில் தனியார் நிறுவனங்களே பெருமளவில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது இந்த வணிகத்தில் மிகப்பெருமளவில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 2012 முதல் 2016 வரையில் தமிழ்நாடு மின்சார வாரியம், தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியைச் சுமார் 25% வரை கூடுதலாக விலை கொடுத்து வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மின்சாரவாரியமே நேரடியாகக் குறைந்த விலைக்கு வாங்கிட ஏதுவான சூழல்கள் இருந்தும், ஒரு டன்னுக்கு 15 முதல் 20 டாலர் வரையில் அதிகமாகக் கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சுமார் ரூபாய் 9000 கோடிக்கு வாங்கியிருக்க வேண்டிய நிலக்கரியை சுமார் 12000 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, 3000கோடி ரூபாய் கூடுதலாக செலவாகியுள்ளது. இது அரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நட்டம் என்பதுடன், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மின்வாரியம் செய்துள்ள இமாலய ஊழல் முறைகேடாகும்.
குறிப்பாக, 1.20 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை ‘அதானி குழுமம்’ என்னும் தனியார் நிறுவனத்திடமிருந்து மட்டுமே வாங்கி இருப்பது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் ‘அறப்போர் இயக்கம்’ பெற்ற தகவலிலிருந்து வெளிப்பட்டுள்ளது. இது இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அளவில் பாதி என்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.
இந்த ஊழல்முறைகேடுகள் குறித்து அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அத்துறையின் அன் றைய அரசு செயலாளர் ஆகியோர் இதுவரை கருத்துக் கூறாமல் அமைதி காப்பது அதிர்ச்சி அளிப்பதாகவுள்ளது. இத்தகைய ஊழல் முறைகேடுகளால்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பது உறுதியாகிறது.
இந்த ஊழல் நடை பெறாமல் இருந்திருந்தால் 2014ஆண்டு அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வைத் தவிர்த்திருந்திருக்கலாம் என்றும் சிறுகுறு தொழில்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இன்றும் நடைமுறையிலிருக்கும் மின்வெட்டுகளையும் தவிர்த்திருந்திருக்கலாம். எளிய மக்கள் இந்த ஊழலால் ஒவ்வொரு யூனிட்டுக்கும் சுமார் 1.5 ரூபாய் வரை அதிகமாகக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏலம்விடும் நடைமுறையிலும் தில்லுமுல்லு நடந்துள்ளது. அதாவது, 30 நாட்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டிய டெண்டரை, அவசரம் அவசரமாக 16 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. இதுவே ஊழல்முறைகேடுகளுக்குச் சான்றாக உள்ளது. அடுத்தட்டு மக்களை வெகுவாகப் பாதிக்கச் செய்யும் மின்வாரியத்தின் இத்தகைய ஊழல்முறைகேடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவன்மையாகக் கண்டிக்கிறது.
இந்நிலையில், இனிவருங்காலத்தில் நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டர் விடும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்துடன், நிலக்கரி இறக்குமதியில் நடந்துள்ள ரூபாய் 3000 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிடவேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.