முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு, ஒரு மாதம் வழங்கப்பட்டிருந்த பரோலை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையில் சுமார் 28 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
தனது மகள் திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நளினிக்கு அவரது தாய் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஜாமீன் அளித்திருந்தனர். இதனை அடுத்து சிறை நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் சிங்காராயர் வீட்டில் அவர் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். வரும் 25-ந் தேதியுடன் நளினியின் பரோல் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அவரது பரோலை 3 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். முதலில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, நளினி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு; சிறையில் இருந்து வெளியே வந்தார்