ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசைக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து

by Nagaraj, Sep 1, 2019, 15:28 PM IST
Share Tweet Whatsapp

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், பாஜக நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தமிழக காங்கிரசில் மூத்த தலைவராக உள்ள குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக பாஜக மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் தெலுங்கானா மாநில ஆளுராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழிசைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தும் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், பாரம்பர்யம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரி தமிழிசை அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என நம்புகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதே போல் கனிமொழி எம்.பி, மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழக பாஜக நிர்வாகிகள் சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் தமிழிசைக்கு நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Leave a reply