காவிரி நதிநீர் இறுதி தீர்ப்பு வெளிவந்த நிலையில், ரசிகர்களிடம் காணொளியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தீர்ப்பு குறித்து வாய் திறக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி அமிதவராய் பிப்ரவரி 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால் அதற்கு முன்னதாக தீர்ப்பை வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு செய்ததன் அடிப்படையில், இன்று வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
150 நாட்களுக்குப் பிறகு, காவிரி வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா காவிரி நீதிமன்ற தீர்ப்பை வாசித்தார்.
அதில், காவிரி நதிநீரை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை முடியாது என்றார். மேலும், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என்ற நடுவர் நீதிமன்ற உத்தரவை மாற்றி, தற்போது 177.25 டிஎம்.சி. நீர் அளவாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனால், 14.75 டி.எம்.சி. நீர் குறைவாக கிடைக்கும்.
தவிர, காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பதாக கூறிய நீதிபதி, இனி மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. காவிரி வழக்கு தொடர்பான இந்த தீர்ப்பு இனிவரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரசிகர்களிடம் காணொளியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நாம் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று அனைவரிடமும் நிரூபித்துக் காட்ட வேண்டும். இது ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு அதை நாம் பயன்படுத்திக் கொண்ண வேண்டும்.
எல்லோரும் நமக்குள் எப்போது சண்டை வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால் போதும் மற்றவற்றை ஆண்டவன் பார்த்துக் கொள்வான்.
இந்த புதிய பயணத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை இதை மட்டும் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து இறுதி தீர்ப்பு வெளியான நிலையில், அது குறித்து ஏதேனும் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அதைப் பற்றி அப்போது எந்த கருத்தும் தெரிவிக்காதது ரசிகர்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மாலை ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில்,
“காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.