உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்

Dmdk urged the tamilnadu government to conduct local body elections immediately

by எஸ். எம். கணபதி, Sep 17, 2019, 09:56 AM IST

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் நடந்தது.

இதில், கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், இந்த விஜயகாந்துக்காக ஒரு நாள் ஒரு பொழுது விடியும். அப்போது தமிழக மக்களை தங்கத் தட்டில் வைத்து தாங்குவேன்என்று குறிப்பிட்டார். விழாவில் பொருளாளர் பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன்பின், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனரினால் ஏற்பட்ட சுபஸ்ரீ மரணத்திற்கு தேமுதிக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் அறவே கைவிட வேண்டும் என்று அனைத்து பொது மக்களையும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிட சுமார் 8835 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீட்டை பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு வெற்றிகரமாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக பாராட்டு தெரிவிக்கிறது.

விவசாயிகள், வியாபாரிகளுக்கு 60 வயது நிரம்பியதும் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் வகையில் பிரதம மந்திரி விவசாய வியாபாரிகள் பென்ஷன் திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பாராட்டு தெரிவித்து கொள்கிறது
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் பொதுமக்கள் முழுமையாக பாதிக்கும் வகையில் அபராதம் விதித்த சட்டத்தினை மற்ற மாநிலங்கள் குறைத்தது போல தமிழ்நாட்டிலும் அபராத தொகையை குறைக்க வேண்டும்.

பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களை உள்ளடக்கிய இந்தியாவில், "ஹிந்தி தான் இந்தியாவின் ஒரே மொழி" என்று தெரிவித்த மத்திய அமைச்சரின் கருத்தை தேமுதிக மறுக்கிறது. தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழக மக்கள் ஒருபோதும் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாமல், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். ஆகவே உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு விரைந்து நடத்திட வேண்டும்.

தமிழக அரசு அறிவித்த புதிய கல்வி திட்டத்தின் கீழ் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
"ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு" என்ற திட்டத்தினை அறிவித்த மத்திய அரசிற்கும் , அதை அமல்படுத்தவிருக்கின்ற தமிழக அரசிற்கும் தேமுதிக தனது பாராட்டு தெரிவிக்கிறது.

You'r reading உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை