இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று(செப்.16) மாலை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சு, பொருளாதாரச் சரிவு, உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மூத்த தலைவர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக கூட்டத்திற்கு வரவில்லை. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
நாட்டின் பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பு இழப்பு, காஷ்மீர் பிரச்னை போன்ற முக்கியமான பிரச்னைகளில் இருந்து இந்திய மக்களின் கவனத்தை திசைதிருப்பிடும் நோக்கத்துடன் இந்தியாவின் அடையாளமாக ஒரே மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி மொழிதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று பெயரிட்டது, சமஸ்கிருதமொழி வாரம், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்தியை முதன்மைப் பாடமாக வைக்க வேண்டும், வங்கிகளில் பணபரிவர்த்தனைகள், மின்னஞ்சல்கள், செல்போன் குறுஞ்செய்திகள், தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி எழுத்துக்கள் என்று வரிசையாக எடுத்த நடவடிக்கைளின் மூலம் தமிழையும் மற்ற மொழிகளையும் தாழ்த்தி, இந்த மொழிகளை தாய்மொழியாக் கொண்டவர்களை இரண்டாம்தர குடிமக்களாக முயற்சி செய்வதையும் யாரும் வேடிக்கை பார்த்து கொண்டு, தக்க எதிர்வினை ஆற்றாமல் காலத்தை வீணாக்க மாட்டார்கள்.
எனவே, பாஜக அரசின் நசு்சு எண்ணத்தை வளரவிட்டால் அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்து விடக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதல்கட்டமாக திமுக சார்பில் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.