பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் என்ற தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னை வந்திறங்கினார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் புறப்பட்டு சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து அவர் விழா நடைபெறும் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்திற்கு சென்று விழாவில் பங்கேற்றார்.