அரசியல் களத்தில் குதித்திருக்கும் கமல் இன்று ரஜினியை சந்தித்துள்ளார். இது கூட்டணி குறித்த விவாததிற்காக இருக்கலாம் என்ற யூகத்திற்கு கமல் பதில் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக களமிறங்கி உள்ளார். வரும் 21ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மக்களை சந்திக்க உள்ளார். இதற்கான பயண விவரத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில், கமல் நடிகர் ரஜினிகாந்தை இன்று திடீரென போஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவா என்ற கேள்வி எழும்பியது.
இதுதொடர்பாக நடிகர் கமல் கூறியதாவது: ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது. அரசியல் ரீதியானது இல்லை. 21ம் தேதி அரசியல் பயணம் செய்ய இருக்கிறேன். அதற்கு முன் எனக்கு பிடித்தவர்களிடம் சொல்லிட்டு செல்கிறேன். அதற்காகத்தான் ரஜினியை சந்தித்து வந்தேன். என்னுடைய அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து சொல்லியிருக்கிறார். மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.