அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆன்மிக தலமாக விளங்கும் தமிழகத்தில் கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவலாயங்கள் என அனைத்து தரப்பு மக்களும் வழிபடும் வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளன. தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் 36,488 திருக்கோயில்களும், 58 திருமடங்களும் செயல்பட்டு வருகின்றன. அதே போன்று, வக்பு வாரியத்தின் கீழ் 3,500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த வழிபாட்டு தலங்களில் இறைபணியை மேற்கொள்ளும் அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு சொற்ப வருமானமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் சலுகை என்பது போதுமானதாக இல்லை. இவர்களின் குடும்பம் சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் வீடுகள் கட்டி தரப்படும் என அறிவித்துள்ளார். இதே போன்று, தமிழகத்தில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்களில் பணிபுரியக் கூடிய அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை வழங்குவதோடு, அதில் வீடுகளையும் அரசே கட்டி தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார்.