“திராவிடத்தாலே எனது அரசியல் பயணத்தில் வெல்வேன்” என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் கால்பதிக்க உள்ள கமல்ஹாசன் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அங்கு, ‘இனி சினிமா துறையில் இருந்து தான் விருப்ப ஓய்வு பெறுவதாகவும் இனிமேல் நடிக்கப்போவதில்லை' என்றும் அறிவித்தார். மேலும், வருகிற 21-ம் தேதி தனது கட்சி தொடக்கவிழாவை தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் நடத்தி கட்சியின் பெயர், சின்னம் உள்ளிடவைகளை அறிமுகப்படுத்த உள்ளார் கமல்.
தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களான நல்லக்கண்ணு, கருணாநிதி என விஜயகாந்த் வரையில் பலரையும் சந்தித்து வரும் கமல் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் நிறையவே இருந்தாலும் அதே திராவிடக் கொள்கையைக் கையில் எடுத்து நானும் வெல்வேன்.
தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் திராவிட நாடுகளே. திராவிட மாநிலங்கள் இணைந்து ஒட்டுமொத்தமாக ஒரு குரல் எழுப்பும்போது அது டெல்லி வரை கேட்கும்” எனக் கூறினார்.