பாஜகவுடன் த.மா.கா.வை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்த தகவல் வதந்தி என்று ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை 11 மணியளவில் சந்தித்து பேசினார். சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதையடுத்து, பாஜகவுடன் த.மா.கா.வை இணைக்க வாசன் முடிவு செய்து விட்டதாகவும், அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடைபெறுவதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமரை சந்தித்து விட்டு வந்த பின்பு, ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் கூட்டணி கட்சி தலைவர் என்ற அடிப்படையில்தான் பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் பேசினேன்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவரிடம் எடுத்து கூறினேன். மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக சொன்னேன். த.மா.கா. எப்போதும் தனித்தன்மையுடன் சிறப்பாக செயல்படும். பாஜகவுடன் தமாகா இணையும் என்ற தகவல் வதந்திதான். அப்படி இணைக்கும் பேச்சுக்கு இடமில்லை. தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.