நடிகர் கமல் பாவம் தொலைக்க ராமேசுவரம் சென்றுள்ளார். அங்கு பாவம் தொலைத்தாரா இல்லையா என மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கடைசி காலத்தில்தான் ராமேசுவரத்துக்கு போவார்கள். பாவம் தொலைக்க அங்கு செல்வர். நடிகர் கமல் பாவம் தொலைக்க ராமேசுவரம் சென்றிருக்கிறார். அங்கு பாவம் தொலைத்தாரா இல்லையா என மக்கள்தான் சொல்ல வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலைத்துறையில் இருந்தபோதே இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, தனது தங்க நகைகளை கழற்றிக் கொடுத்தவர். அப்போது, அவர் அரசியலுக்கு வருவோம் என கனவிலும் நினைக்கவில்லை.
கலைத்துறையில் இருந்தபோதே சேவை மனப்பான்மையை பெற்றவர் ஜெயலலிதா. எம்ஜிஆரும் கலைத்துறையில் இருந்தபோது, பல்வேறு சேவைகளை புரிந்துள்ளார். கலைத்துறையில் இருந்த நீங்கள் என்ன சேவை செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.