தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு ஒப்புதல்..

Centre given approval to set up 3 more medical colleges in Tamilnadu

by எஸ். எம். கணபதி, Nov 27, 2019, 13:45 PM IST

தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 6 மருத்துவக் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

இதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து ஏற்படுத்தப்படவுள்ள இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் இருக்கும்.

தமிழகத்தில் ஏற்கெனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, பெருந்துறை ஐஆர்டி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள 350 இடங்கள் ஆகியவற்றுடன் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால் அரசுக் கல்லூரிகளில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கும்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த 3 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்தால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயரும்.

புதிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் 4, 600 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இடங்களின் எண்ணிக்கை அதிகமானாலும், நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைப்பதை விட வடமாநில மாணவர்களுக்குத்தான் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சோகக் குரலும் ஒலிக்கிறது.

You'r reading தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை