இறைவனை கூட வழிபாடு செய்யாத கமல் ஒரு இந்து துரோகி. இருந்தாலும் புதியதாக கட்சித் துவங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை துவக்கினார். முதலில் ராமேஸ்வரம் சென்ற அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார்.
ராமேஸ்வரம் சென்ற அவர், அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் அன்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, “ராமேஸ்வரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்னைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்றவர் தான் கமல்.
அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்றவருக்கு, அங்கு இருக்கும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லக்கூட நேரமில்லை. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே பரமக்குடி, மானாமதுரை மக்களை ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டார்.
ஆன்மீக இடமான ராமேஸ்வரத்திற்கு சென்று இறைவனை கூட வழிபாடு செய்யாத கமல் ஒரு இந்து துரோகி. இருந்தாலும் புதியதாக கட்சித் துவங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.