தீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை.. எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்..

Sdpi request the govt. to release all the activists arrested in mettupalatam incident

by எஸ். எம். கணபதி, Dec 4, 2019, 09:21 AM IST

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

எஸ்டிபிஐ கட்சி. தேசியதுணைத் தலைவர் கே. கே. எஸ். எம். தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது:

மேட்டுப்பாளையத்தில் நேற்று சுவர் இடிந்து விழுந்து ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த 17 அப்பாவி மக்கள் பலியானார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எதேச்சையான விபத்தல்ல! அந்த பகுதியில் எழுப்பப்பட்டிருந்த தீண்டாமை சுவர் தான் இந்த உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுவரை அகற்றக்கோரி பல போராட்டங்களை நடத்தியும் அந்த சுவரை அகற்றாததற்கு மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும். எனவே, இந்த விபத்திற்கு காரணமான சுவரை அகற்றாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மேட்டுப்பாளையத்தில் நீதிக்காகப் போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்டோர் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல அதை உயர்த்தி 25 லட்சமாக வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக போராடி வரும் அமைப்பின் தலைவர்களான நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்டோர் மீது கொடூரமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகமோசமான நிகழ்வாகும்.

காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தீண்டாமை சுவற்றின் உரிமையாளரை கைது செய்யாமல் போராடிய தலைவர்களை, மக்களை கைது செய்வது எவ்விதத்தில் நியாயம் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். நீதிகேட்டு போராடுவதை கிரிமினல் குற்றமாக கருதி போராடுபவர்கள் மீது வழக்குப பதிவு செய்வதையும், அவர்களை கைது செய்வதையும் தமிழக காவல்துறை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை தமிழக அரசு உணரவேண்டும்.

நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற்று அவர்களை விடுதலை வேண்டும். போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தெகலான் பாகவி கூறியுள்ளார்.

You'r reading தீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை.. எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை