எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன்..

Admk wings keeps minister sengottaiyan in distance

by எஸ். எம். கணபதி, Dec 4, 2019, 13:40 PM IST

அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணிகள் ஓரம்கட்டி வைத்துள்ளன.

தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியிலும், அமைச்சரவையிலும் முக்கியமான சீனியர்களில் ஒருவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். ஆனால், இப்போது அவரது நிலைமை நாளுக்கு நாள் பரிதாபமாக மாறி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் பொறுப்பேற்றது முதல் அவருக்கும், அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம்தான். ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் துவங்கி, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது வரை இரண்டு பேரும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருப்பதால், கல்வித் துறை அதிகாரிகள் படும்பாடு சொல்லி மாளாது.

சமீபத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் அனைத்து காலி பணியிடங்களையும் வெளிப்படையாக காட்டி நடத்தினர். எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவான சில ஆசிரியர் சங்க தலைவர்கள் கூட அதற்்கு வரவேற்பு தெரிவித்தனர். அதேசமயம், கட்சிக்காரர்கள் கேட்கும் இடமாறுதலை செய்து தர முடியாமல் அமைச்சர் செங்கோட்டையன் திணறினார். கலந்தாய்வுக்கு பின்னர், காலியாக உள்ள இடங்களிலாவது கட்சியினர் கேட்கும் மாறுதல்களை செய்யுமாறு அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் செயலாளர் பிரதீப் யாதவோ, முடியாது என்று ஒற்றைக்காலில் நிற்கிராராம்.

அமைச்சர் மற்றும் செயலர் இடையே ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது. சென்னையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சிக்கான புத்தகம் வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன், தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது அவசியமில்லை என்ற ரீதியில் பதிலளித்து கொண்டிருந்தார். உடனே டென்ஷனாகி விட்ட பிரதீப் யாதவ், 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. அதற்கு பிறகு உங்கள் இஷ்டம் என்று செய்தியாளர்கள் முன்பாகவே ஓங்கிப் பேசினார். இதனால், என்ன பேசுவதென்றே தெரியாமல் விழிபிதுங்கினார் அமைச்சர்.

இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சரை ஆளும்கட்சி ஒரம்கட்டி வைத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த தேர்தல் பேச்சுவார்த்தைகள் உள்பட கட்சியின் முக்கிய நிகழ்வுகள் எதிலுமே இவருக்கு எந்த பங்கும் கொடுக்கப்படவில்லை. அரசு நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான். கோட்டையிலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால்தான், அவரது துறை செயலாளரே அவருக்கு கட்டுப்படுவதில்லை.

1991ம் ஆண்டில் ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கியமான அமைச்சராக வலம் வந்த இவர் தற்போது டம்மி அமைச்சராகவே இருக்கிறார். இதற்கு காரணம், இவர் இன்னமும் சசிகலா விசுவாசியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் சி.எம், துணை முதல்வர் டீமுக்கு இருக்கிறது. அதனால், இரண்டு அணிகளுமே இவரை ஓரம்கட்டி விட்டார்கள் என்றார்.

You'r reading எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை