மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் வேறுபாட்டு வழியில் சென்றாலும் போய்ச்சேரும் இடமும் நோக்கமும் ஒன்றுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். அப்போது பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தனிக்கட்சித் தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன்” என்று அறிவித்தார்.
ரஜினிகாந்தின் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக, தனது ரசிகர் மன்றத்தின் பெயரை மாற்றம் செயதார். அதாவது, ஏற்கனவே இருந்த அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்திற்குப் பதிலாக புதிதாக ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் சூட்டினார்.
மேலும், தனது அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது கட்சி நிர்வாகிகள் குறித்து ஆலோசணை மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நெல்லை மாவட்ட ரசிகர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், “அரசியல் கட்சித் தொடங்குவதற்கு கட்டமைப்பு மிக மிக முக்கியம். அதனை சரியாக செய்ய வேண்டும். மிகப்பெரிய கட்சிகள் அதனால்தான் வெற்றிப்பெற்றன.
எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை, அவர்கள்தான் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்” என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமலுக்கு வாழ்த்துகள். அவரின் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. அவரது கூட்டத்தை முழுவதுமாக பார்த்தேன். இதற்கு பின்னர் மீண்டும் அவருக்கு நான் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.
கமல் ஒரு திறமைசாலி அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு தெரிகிறது. மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் வேறுபாட்டு வழியில் சென்றாலும் போய்ச்சேரும் இடமும் நோக்கமும் ஒன்றுதான்” என்று தெரிவித்துள்ளார்.