கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்றபோது, துப்பாக்கிச்சூட்டில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டதாக கூறப்படும் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது. நகைகளை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தானுக்கு தப்பிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், ஆய்வாளர் முனிசேகர் உள்பட போலீசார் ராஜஸ்தானுக்கு சென்றனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெரிய பாண்டியன் உயிரிழந்தார். பெரிய பாண்டியனை சுட்டது கொள்ளையன் என்று நினைத்து வந்த நிலையில், பெரிய பாண்டியனை முனிசேகர் தான் தவறுதலாக சுட்டுவிட்டார் என்று பின்னர் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொளத்தூர் ஆய்வாளராக இருந்த முனிசேகர் பணியிடம் குறிப்பிடப்படாமல் தெற்கு மண்டலத்துக்கு டிஜிபியால் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.