ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் போட்ட ஒரு ட்விட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் வரிசைகட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்ல முயன்றனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்கள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர்.
அப்போது வன்முறை வெடித்தது. போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கலவரத்தில் இருந்து தப்புவதற்கு மாணவர்கள் பலரும் பல்கலைக்கழக விடுதிக்குள் சென்றனர். அப்போது போலீசார் அங்கு திரண்டு சென்று, மாணவர்களை சிறைபிடித்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபடாமல் நூலகத்தில் இருந்த மாணவர்களையும் போலீசார் பிடித்து சென்றதாகவும், பல்கலைக்கழகத்திற்குள் மின்சாரத்தை தடை செய்து விட்டு, மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்புகை வீச்சு என்று கடுமையாக தாக்கியதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஜமியா பல்கலை. மாணவர்களுக்கு ஆதரவாக பல ஊர்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், அவர்கள் இருவரும் கிருஷ்ணாவும், அர்ஜுனாவும் அல்ல. அவர்கள்சகுனியும், துரியோதனும் என்று குறிப்பிட்டு, ஸ்டாப் அட்டாக்கிங் யுனிவர்சிட்டீஸ் என்ற ஹேஸ்டாக்குடன் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். அப்போது, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், கிருஷ்ணரும், அர்ஜுனரும் போல செயல்படுவதாகவும் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், சித்தார்த் அதற்கு மறைமுகமாக பதிலளிப்பது போல் ட்விட் செய்தது பெரும் சர்ச்சையாகி விட்டது. அவரது ட்விட்டுக்க ஏராளமானோர் பதில் ட்விட் போட்டிருக்கிறார்கள். அதில், ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கியும், ரஜினிக்கு எதிரானவர்கள் அவரை பாராட்டியும் ட்விட் செய்துள்ளனர். மேலும் அவரது துணிவை சிலர் பாராட்டியுள்ளனர்.