தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு ஜன.1ம் தேதி வரை விடுமுறை விடுவதற்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருவதால் அதை முடிப்பதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல ஊர்களில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் உயர்கல்வி துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா நேற்று தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டதாவது :
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் வரும் 27, 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஊரக பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் தங்களுடைய வாக்களிக்கும் வகையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையிலும் இன்று முதல் ஜன.1ம் தேதி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் ஜன.2 ம் தேதி திறக்கப்பட வேண்டும்.
விடுமுறை விடப்படும் 23, 24, 26, 31 ஆகிய நாட்களுக்கு பதிலாக வருங்காலத்தில் சனிக்கிழமை மற்றும் இதர விடுமுறை நாட்களில் கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை நடத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் விடுமுறை அறிவித்தன. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
அதே போல், வரும் 23ம் தேதி திங்கட்கிழமை திமுக கூட்டணி சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தப்பட உள்ளது. இதற்கு மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போராட்டங்களை முறியடிக்கும் திட்டத்துடன்தான் விடுமுறை விடப்பட்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு டிச.27, 30 தேதிகளில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டியிருப்பதாகவும் பேசப்படுகிறது.