போலீஸ் தடையை மீறி திமுக கூட்டணி பேரணி.. வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவு

by எஸ். எம். கணபதி, Dec 23, 2019, 07:56 AM IST

போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் இன்று(டிச.23) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக ராஜரத்னம் ஸ்டேடியம் வரை கண்டனப் பேரணி நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், திமுக பேரணிக்கு போலீசார் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, இந்தியன் ரிப்போர்ட்டர் என்ற இதழின் ஆசிரியர் வாராகி, சென்னை ஆவடியைச் சேர்ந்த எழிலரசு ஆகியோர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக எடுத்து நேற்றிரவு 9 மணியளவில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பிலும், அரசுதரப்பிலும் வாதிடப்பட்டது. திமுகவுக்கு நோட்டீஸ் அளிக்கப்படாததால் அவர்கள் ஆஜராகவில்லை.
அரசு தரப்பில் பிளீடர் ஆஜராகி, பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை. திமுக தரப்பில் அனுமதி கேட்ட போது 18 கேள்விகளை எழுப்பி கடிதம் அளித்தோம். அதற்கு மழுப்பலாக பதிலளித்திருந்தனர். அதானல், அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று தெரிவித்தார்.
நீண்ட வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஜனநாயக போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. போலீசாரின் கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளிப்பது ஆச்சரியமளிக்கிறது. எனினும், போலீசாரின் தடையை எதிர்த்து திமுக வழக்கு தொடுக்கவில்லை. எனவே, தடையை மீறி பேரணி நடந்தால், அதை காவல் துறையினர் முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும். வன்முறை நடந்தால் அதற்கு அந்த கட்சி தலைவர்கள் பொறுப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டனர்.
இதைத் தொடர்ந்து பேரணி கண்டிப்பாக நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன்படி, பேரணி இன்று(டிச.23) காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், பேரணி முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுளளனர். போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.


Leave a reply