குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடர், ஜூலை 20ம் தேதி முடிவுற்றது. இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, தனது உரையைத் தொடங்கினார். அவர் உரையைத் தொடங்கியதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரினார். அப்போது ஆளுநர் புரோகித் தனது உரைக்கு பின்னர் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கலாம் என்றார். மேலும், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்ததற்கு முதலமைச்சருக்கு வாழ்த்து கூறி, உரையை வாசித்தார்.
அப்போது திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், ஸ்டாலின் தலைமையில் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, அதிமுக கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினரான தமிமுன் அன்சாரி கருப்பு நிறத்தில் டி-சர்ட் அணிந்து வந்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நோ சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என்று எழுதப்பட்டிருந்தது.
சட்டபைக்கு ஆர்.கே.நகர் தொகுதி உறுப்பினரும், அ.ம.மு.க. பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் வந்திருந்தார்.