டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைபெற்ற குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு பணிகளில் சேருவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்கிறது. இந்த ஆணைய உறுப்பினர்களாக ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களே ெபரும்பாலும் நியமிக்கப்படுவதால், பல ஆண்டுகளாக தேர்வுகளில் ஊழல் நடைபெற்று வருகிறது.
கடைசியாக, ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன், இந்த ஆணையத்தில் செயலாளராக இருந்த போது தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க ஆன்லைன் பதிவு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து, அவர் மாற்றப்பட்டார். இதன்பிறகு மீண்டும் ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகளை தேர்வு எழுதியவர்கள் ஆய்வு செய்த போது, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடித்து தேர்வாணையம் மீது குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் (1606), கீழக்கரை (1608) ஆகிய மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் தான் தரவரிசையில் முதல் 100 இடங்களில் வந்துள்ளனர். அதிலும், முதல் 5 பேர் இந்த மையங்களில் எழுதியவர்களாம். மேலும், இடஒதுக்கீடு பிரிவுகளில் முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுதியுள்ளனர்.
அது மட்டுமின்றி, கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் முக்கால்வாசி பேர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்படகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கம் அளிக்க முடியாமல் திணறும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் வழக்கம் போல் மழுப்பலாக பதில் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, 2017-18 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு எழுதியவர்களிலும் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் இருந்து எழுதியவர்கள்தான் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குரூப் 2 தேர்விலும் சுமார் 50 பேர் இப்படி தரவரிசையில் முன்னிலை இடங்களை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், குரூப் -1 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு வேண்டிய சிலர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்கள் தேர்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே தாங்கள் தேர்ச்சி பெற்றதை கொண்டாடியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதையடு்த்து, குரூப் 4, குரூப் 2 தேர்வுகளை மீண்டும் நடத்த வேண்டுமென்று விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முயற்சித்து வருகின்றனர்.