முதியோர் இல்லத்தில் இறந்தவர்களின் உடல் விற்பனை குறித்து நீதி விசாரணை தேவை: வேல்முருகன் கோரிக்கை

Feb 26, 2018, 16:10 PM IST

காஞ்சிபுரம் முதியோர் சேவை இல்லத்தில் இறந்தவர்களின் உடல் விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு நீதி விசாரணை வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்ஜிஓ அதாவது சேவை மையம், அரசியலுக்கும் வந்துவிட்டது. காரணம் வெள்ளமாய் பெருக்கெடுக்கும் வெளிநாட்டுக் கரன்சிதான். பெயர்தான் சேவை மையம்; ஆனால் நடப்பதோ வர்த்தகம்! அது எந்த வர்த்தகமாகவும் இருக்கலாம்; வகைதொகையற்ற ’பணம்’ வர்த்தகத்தின் மூலம்தானே சாத்தியம்!

அதனால்தான் யாருமே செய்யாத, போட்டியே இல்லாத மய்ய வர்த்தகத்தை அதாவது பிண வியாபாரத்தைத் தேர்வு செய்திருக்கிறார் தாமஸ் கேரளாவைச் சேர்ந்தவரான இந்த தாமஸ், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் ஏழு ஆண்டுகளாக தன் சேவை மய்யத்தை நடத்திவருகிறார். ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதித்தோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தன் சேவை மய்யத்தில் வைத்து பராமரித்து வருகிறார். இந்த சேவை மய்யத்துக்குள் வந்த யாரும் எப்போதுமே வெளியே செல்ல முடியாது என்று தெரிய வருகிறது.

அந்த சேவை மையத்தில் மனித உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சடலங்கள் எதற்கும் மருத்துவ ஆவணங்களோ முறையான சான்றிதழ்களோ இல்லை. உரிமம் இல்லாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கப்படாமல் சேவை மையம் என்று நடத்தும் தாமஸ், 1590 உடல்கள் பாதாள பிண அறையில் உள்ளதாக பேட்டி அளிக்கிறார். அப்படியிருக்க, பிணக்குவியலால் காற்று மாசுபட்டுச் சுற்றுச்சூழல் பாதித்துச் சுகாதாரம் சீர்கெட்டு நோய்கள் பரவும் ஆபத்திற்கு என்னதான் நடவடிக்கை?

இறந்தவர்களின் உடல் விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பணியிலுள்ள நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading முதியோர் இல்லத்தில் இறந்தவர்களின் உடல் விற்பனை குறித்து நீதி விசாரணை தேவை: வேல்முருகன் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை