சென்னை புத்தக கண்காட்சி முதல்வர் தொடங்கி வைத்தார்

Chennai book show inaugurated by C.M Edappadi palanasamy

by எஸ். எம். கணபதி, Jan 10, 2020, 09:55 AM IST

சென்னையில் 43வது புத்தக கண்காட்சி தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு 43-வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. விழாவுக்கு நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் உள்ளே சென்று அரங்குகளை பார்வையிட்டார்.


விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், புத்தகங்களே நம்மை ஒருபோதும் ஏமாற்றாத சிறந்த நண்பன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியை கண்டிருக்க முடியாது. இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற அரசின் நிதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் இருந்து இந்த புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்றார்.

விழாவில் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது அரு.லெட்சுமணனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பக செம்மல் ச.மெய்யப்பன் விருது அருணாசலத்துக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது பொற்கோவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது என்.எஸ்.சிதம்பரத்துக்கும், பபாசியின் சிறந்த பதிப்பாளருக்கான விருது ராம லெட்சுமணனுக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது செ.சுகுமாரனுக்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது ரமணிசந்திரனுக்கும் வழங்கப்பட்டது. முதலமைச்சர் இந்த விருதுகளை வழங்கினார்.

கண்காட்சி வளாகத்தில் கீழடி-ஈரடி தமிழ் தொன்மங்கள் என்னும் தலைப்பில் அமைக்கப்பட்ட கீழடி அகழாய்வு தொடர்பான சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இந்த அரங்கில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய், நீர் மேலாண்மை திட்டம், கருப்பு சிவப்பு குவளைகள், உறை கிணறு உள்ளிட்ட பொருட்களின் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. கீழடி அகழாய்வு பணிகள் குறித்த ஒளிப்பட காட்சி கூடமும் அமைக்கப்பட்டிருந்தது.

அதேபோல ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவர் மணற்சிற்பமும் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக கண்காட்சி வருகிற 21ம் தேதி வரை நடைபெறும். நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார்.

You'r reading சென்னை புத்தக கண்காட்சி முதல்வர் தொடங்கி வைத்தார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை