இஸ்லாமியர் கோரிக்கை.. சட்ட ஆலோசனை கேட்க முதல்வர் எடப்பாடி முடிவு

by எஸ். எம். கணபதி, Jan 11, 2020, 08:32 AM IST

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து தெளிவான முடிவை அறிவிப்பதாக முதல்வர் உறுதியளித்தார் என்று முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன.மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்ததால், தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் அரணாக காப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் கூறினார்.


இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, 23 முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சந்தித்து மனு அளித்தனர். இக்குழுவினருடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.


குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முஸ்லிம் மக்களிடையே மிகுந்த அச்சம் உள்ளதால், அதை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என முதல்வரிடம் இக்கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர். சந்திப்புக்கு பின்பு அபுபக்கர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) தொடர்பாக இஸ்லாமியர் சமூகத்தினருக்கு இருக்கும் அச்சங்கள் குறித்து விவரித்தோம். என்பிஆர், என்சிஆர் பதிவேடுகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கேள்விகள் மூலம் ஏற்படவுள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துச் சொன்னோம். இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடனும், மூத்த அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்து தெளிவான முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார். எந்த வகையிலும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பதில் சொல்வதாகக் கூறியிருக்கிறார். மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்”என்று கூறினார்.Leave a reply