தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

by எஸ். எம். கணபதி, Jan 19, 2020, 09:19 AM IST
Share Tweet Whatsapp

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. சென்னையில் இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் ஜனவரி, மார்ச் மாதங்களில் குழந்தைகளுக்கு போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. போலியோ நோய் பாதிப்பே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. எனினும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்து முகாமை தொடங்கி வைத்துள்ளார். குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதே போல், மாவட்டத் தலைநகரங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மாநிலம் முழுவதும் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் போலியோ சொட்டு மருந்து குழுக்களும் இயங்கி வருகின்றன.


Leave a reply