குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு.. திமுக கூட்டணி ஆலோசனை

by எஸ். எம். கணபதி, Jan 24, 2020, 12:42 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து திமுக கூட்டணி ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

மத்திய பாஜக அரசு கடந்த டிசம்பரில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இங்கு வசிக்கும் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் இதில் இடம் பெறவில்லை. அதனால், மதரீதியாக இந்த சட்டம் அமைந்துள்ளதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

திமுக கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதன் முடிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, விரைவில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதே போல், சமீபத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடந்த போதும், அதை அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம், இன்று காலை கூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி, கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவை குறித்தும், அதை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

You'r reading குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு.. திமுக கூட்டணி ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை