ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணை

by எஸ். எம். கணபதி, Jan 25, 2020, 11:19 AM IST

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். அப்போது, சசிகலாவால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு(பிப்.2017ல்) நடத்தினார். அதில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதனால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தார்.

இதற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்தன. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இதனால், அவர் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதை எதிர்த்து, திமுகவை சேர்ந்த சக்ரபாணி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த ஐகோர்ட், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என கூறி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சக்ரபாணி, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்த போது, சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு, வழக்கு விசாரணை தள்ளிப் போடப்பட்டது. இது வரை அது விசாரணைக்கே வரவில்லை.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான பெஞ்ச் கடந்த 2 நாள் முன்பாக ஒரு தீர்ப்பு அளித்தது. அதில், மக்களவை மற்றும் மாநில சட்டசபை சபாநாயகர்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களில் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், அரசியல்ரீதியாக சபாநாயகர் முடிவெடுப்பதால் அந்த தீர்ப்புகள் நியாயமாக இல்லை என்பதால், கட்சித் தாவல் தடைச் சட்ட மனுக்களை பாரபட்சமற்ற டிரிபியூனல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதையடுத்து, திமுகவின் சக்ரபாணி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் நேற்று(ஜன.24) தலைமை நீதிபதி போப்டே பெஞ்ச் முன்பாக ஆஜராகி, ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது, நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தீர்ப்பை மேற்கோள் காட்டி, இந்த அடிப்படையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 பேர் மீதான கட்சித்தாவல் தடைச் சட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரினார். இதை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டு விரைவில் வழக்கை விசாரிப்பதாக உறுதி அளித்தார். இதனால், அடுத்த வாரமே இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் ஓரிரு வாரங்களில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை