டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு என்ற சாகச நிகழ்ச்சி, ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாகும். பியர்கிரில்ஸ் என்பவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், மக்கள் நடமாட்டமே இல்லாத மலை, அடந்த வனப்பகுதியில் பியர்கிரில்ஸுடன் இறக்கி விடப்படுவார்கள்.
ஆள் அரவமற்ற அடந்த வனத்தில் தனியாளாக எப்படி அந்த பிரபலம் செயல்படுகிறார் என்பதுதான் நிகழ்ச்சி. மேலும், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்து பியர்கிரில்ஸ் கற்றுத் தருகிறார். இதை வீடியோவில் பதிவு செய்து பின்னர் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப்படும். இந்த சாகச நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது, ரஜினி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதன் முதல் தொடருக்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பியர்கிரில்ஸ் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள வனக்காவலர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துகொண்டார்.
பந்திப்புரா காட்டில் படப்பிடிப்பின் போது ரஜினி கீழே விழுந்து முட்டியில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியாதவது:
படப்பிடிப்பின் போது எனக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி எதுவும் ஏற்படவில்லை. அடர்ந்த முள் புதருக்குள் செல்லும் போது முட்கள் கீறியதில் சிராய்ப்புகள்தான் ஏற்பட்டது, இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.