குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட காரைக்குடி சார்பதிவாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, குரூப்1 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 99 பேர் மட்டும் இடைத்தரகர்கள் கூறியபடி, ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடைத்தரகர்கள் ஒரு பேனாவை அளித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு எழுதினால், விடைகளை எழுதிய சில மணி நேரத்தில் அவை மறைந்து விடும்.
இப்படி அழிந்து விட்ட விடைத்தாள்களில், தேர்வு அலுவலர்களின் துணையுடன் இடைத்தரகர்கள் சரியான விடைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படியாக 99 பேரின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்ததும் தெரிய வந்துள்ளது. அந்த 99 பேரில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர்.
இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து, தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடத்தப்பட்ட குரூப்-2ஏ தேர்விலும் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெற்று, அதற்கான பணியிடங்களில் சேர்ந்து ஊதியமும் பெற்று விட்டனர். இதற்கிடையில் தான் இந்த புகார் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.
குரூப்-2ஏ தேர்வு முடிவுகளின் தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்களில் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வு முறைகேடுகள் குறித்தும் சி.பி.சி.ஐ.டி போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அதாவது, சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே பெரியகண்ணனூரில் ஆடு மேய்த்த திருவராஜ் என்பவர்தான் குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்தவர். அவரை கைது செய்து விசாரித்த போது, அதே ஊரைச் சேர்ந்த சித்தாண்டி(46) சிக்கினார். அவர் 2012ம் ஆண்டில் போலீஸ்காரராக வேலைக்கு சேர்ந்து சப்இன்ஸ்பெக்டராகி இருக்கிறார். இவர்தான் தனக்கு பழக்கமான ஒரு அதிகாரி துணையுடன் குரூப்4, குரூப்2 தேர்வுகளில் முறைகேடுகளை புரிந்து, தனது குடும்பத்தினரை அரசு பணியில் சேர்த்திருக்கிறார். சித்தாண்டியின் மனைவி பிரியா, தம்பிகள் வேல்முருகன், கார்த்தி ஆகியோர் முறைகேடாக அரசு பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் வேல்முருகன், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சார்பதிவாளராக பணியாற்றி வந்தார். சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கே சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர், அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. அவரை போலீசார் அழைத்து செல்லவும் அந்த சார்பதிவாளர் அலுவலகம் பரபரப்பானது. அவர் போலி அதிகாரியாம், இன்னும் எத்தனை அதிகாரிகள் சிக்கப் போகிறார்களோ தெரியவில்லை... என்று சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள், மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இந்த வேல்முருகன், கார்த்தி, சித்தாண்டியின் மனைவி பிரியா ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற குரூப்2 தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று வேலைக்கு சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. சித்தாண்டி தன்னை போலீசார் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை அறிந்த சித்தாண்டி, ஒரு மாதத்திற்கு முன்பே மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற குரூப் 1 தேர்விலும் பலர் முறைகேடாக வெற்றி பெற்று சேர்ந்திருப்பதாக தற்போது புகார்கள் வந்துள்ளன. மேலும், அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள், தலைமைச் செயலகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் உறவினர்கள் சிலரும் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றிருப்பதால், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளில் அரசியல் செல்வாக்கு உடையவர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. துறை அமைச்சர் ஜெயக்குமார் நீக்கப்பட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலினும் கோரிக்கை விடுத்துள்ளார்.