திமுக ஆட்சிக்கு வந்ததும், திமுகவினர் பொறுப்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று மடங்கு நிதி ஒதுக்கப்படும் என்று கே.என்.நேரு பேசியுள்ளார்.
திருச்சியில் கேர் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுகவின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வென்ற 30,000 பேர் இதில் பங்கேற்றனர். மேலும், திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
திமுக மாநாடுகளில் முதல் நிகழ்ச்சியாக கட்சிக் கொடி ஏற்றுவது நடைபெறும். அதே போல், கட்சியின் பிரசார பாடல்கள்தான் ஒலிக்கும். ஆனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, அப்படியில்லாமல் அரசு விழாவை போல் குத்து விளக்கேற்றி, மங்கல இசையுடன் தொடங்கப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கை ஏற்றினார். அவருடன் மூத்த தலைவர்கள் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி ஆகியோருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து குத்துவிளக்கேற்றினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசும் போது, அமைச்சர் கருப்பணன் பேசியதற்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்த நிதி தான் வழங்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் பேசியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த அமைச்சருக்கும் ஒரு அதிகாரமும் கிடையது. அமைச்சர் கருப்பண்ணனுக்கு அப்படியே அதிகாரம் இருந்தாலும், குறைந்த நிதியை இந்த அரசாங்கம் ஒதுக்கினாலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று மடங்கு நிதியை தளபதி ஸ்டாலின் வழங்குவார் என்றார்.