தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் திருமுறை, வேதங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.
ராஜராஜ சோழனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(பிப்.5) குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.
முன்னதாக, பிப்.1-ம் தேதி மாலையில் முதல் யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. பிப். 2-ம் தேதி காலை 2ம் கால யாக பூஜைகளும், மாலையில் 3ம் கால யாக பூஜைகளும், பிப். 3-ம் தேதி காலை 4ம் கால யாக பூஜைகளும், மாலையில் 5ம் கால யாக பூஜைகளும், பிப்.4ம் தேதி காலை 6ம் கால யாக பூஜைகளும், மாலையில் 7ம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
இன்று (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் ஆகியவையும் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன.
மந்திரமாவது நீறு.. என்று திருஞான சம்பந்தரின் தேவார திருமுறைகளை ஓதுவார்கள் பாடியும், அர்ச்சகர்கள் சமஸ்கிருதத்தில் வேதங்களை முழங்கியும் குடமுழுக்கு நிகழ்வு நடைபெற்றது. , கோயில் உள்பிரகாரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேர் பங்கேற்று வழிபட்டனர். வெளிப்பிரகாரம், கிரிவலப் பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் நின்று தரிசனம் செய்தனர்.
மேலும், பல இடங்களில் சிவபக்தர்கள் பக்திப் பரவசத்துடன் நடனம் ஆடினர். குடமுழுக்கு முடிந்ததும் அந்த புனித நீரை கூடியுள்ள பக்தர்கள் மீது தெளிப்பது வழக்கம். ஆனால், இங்கு வி.ஐ.பி.க்கள் உள்ள பகுதியில் மட்டுமே புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயில் உள்பிரகாரத்தில் கூடியிருந்த 10 ஆயிரம் பக்தர்கள் மீது கூட புனித நீர் தெளிக்கப்படவில்லை. கோயிலுக்கு வெளியே கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் இதே மனக்குறை ஏற்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஒரு விசேஷ ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து புனித நீரை தெளித்திருக்கலாம் என பக்தர்கள் குறைபட்டு கொண்டனர்.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அமைச்சர்களில் ஓ.எஸ்.மணியன் மட்டுமே வந்திருந்தார். அதே சமயம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தஞ்சாவூர் அமைச்சர் துரைகண்ணு உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு வரவில்லை.