வருமானக் கணக்குகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நடிகர் விஜய்க்கு வருமானவரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த பிகில் படம், கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியிருக்கிறது. இதில் வருமான வரித் துறைக்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்று கூறி, விஜய் வீடுகளிலும், படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவன அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடுகளிலும், மதுரை பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
மேலும், கடந்த 5ம் தேதியன்று நெய்வேலி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனால், படப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது. நெய்வேலியில் இருந்து ஐ.டி. அதிகாரிகள், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு அவரை அழைத்து சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு பின்பு, விஜய் மீண்டும் நெய்வேலி சென்று மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மேலும், அவர் நேற்று படப்பிடிப்புக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு வந்தார். அங்கு ஒரு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அங்கிருந்தபடியே ரசிகர்கள் பின்னணியில் செல்பி எடுத்து கொண்டார்.
இந்நிலையில், அவருக்கும், பைனான்ஸ்சியர் அன்புச் செழியன், கல்பாத்தி அகோரம் உள்ளிட்டவர்களுக்கும் வருமானவரித் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். தாங்கள் பறிமுதல் செய்துள்ள ஆவணங்களுக்கு கணக்கு கேட்பதற்காக அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனாலும், வருமானவரித் துறை சம்மனுக்கு விஜய் இ்ன்று ஆஜராகவில்லை. அவர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.