தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்.. அரசு ஊழியர்களுக்கு சலுகை..

by எஸ். எம். கணபதி, Feb 14, 2020, 09:03 AM IST

அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். பின்பு, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 9ம் தேதி வரை நடந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அத்துடன், சட்டசபை ஒத்தி வைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி, இந்த தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும். வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்றும், 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் என்றும் தெரிகிறது. அனேகமாக, இந்த கூட்டத் தொடர் மார்ச் 20ம் தேதி வரை நடைபெறலாம்.

அதிமுக அரசு தொடர்ந்து 2வது முறையாக கடந்த 2016ல் பொறுப்பேற்றது. எனவே, இந்த பட்ஜெட்தான் அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யலாம். எனவே, இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களின் போராட்டங்களை ஒடுக்கியதால், அவர்கள் அதிமுக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்த அறிவிப்பு வரலாம். அதே போல், ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு தொகை 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று பேசப்படுகிறது. இதே போல், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.


Leave a reply