பெண் குழந்தைகள் பாதுகாப்பைக் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை.. மு.க.ஸ்டாலின் பேச்சு..

by எஸ். எம். கணபதி, Feb 24, 2020, 10:55 AM IST

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று(பிப்.24), தமிழக அரசின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த தினத்தைக் கொண்டாட அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் நேற்று(பிப்.23) இணைந்தார். மதுரை ஒத்தக்கடையில் பைபாஸ் சாலை அருகே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் இணைப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராஜகண்ணப்பனும் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தின் நிதி நிலைமை கோமா நிலைக்குப் போய் விட்டது. திமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன்சுமை ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இது ரூ.4.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா ஆட்சியை விட முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சியில்தான் கடன் சுமை அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை பார்த்தால், அரசின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பது தெரிகிறது.

சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் திருமண நிகழ்ச்சிக்காக அதிமுகவினர் பேனர் வைத்திருந்தனர். அந்த பேனர் விழுந்து சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் இறந்தார். நான் அந்த பிராமணப் பெண் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, திமுக சார்பில் முடிந்த ஒரு நிதியுதவியை அளித்து விட்டு வந்தேன். ஆனால், அதிமுக அமைச்சர்கள் அங்குப் போய் ஆறுதல் சொன்னார்களா? இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் இதே போல்
கோவையில் ஒரு சம்பவம். அதிமுக பேனர் விழுந்து அனுராதா என்ற மாணவி பலத்த காயமடைந்தார். நான் அவரை சென்று பார்த்து ஆறுதல் கூறினேன். ஆனால், அந்த பேனர் விழுந்ததைப் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று ஆளுங்கட்சியினர் அந்த குடும்பத்தினரை மிரட்டினார்கள். இப்படிச் செய்யும் அதிமுகவினர்தான், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடப் போகிறார்களாம். பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாட அதிமுக அரசுக்குத் தகுதி இல்லை. பொள்ளாச்சியில் என்ன நடந்தது? எத்தனை பெண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது? திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து விட்டதாக அரசு பொய் சொல்கிறது. முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிடத் தயாரா? தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 7.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விரல் நகத்தில் மண் இல்லை. ஊழல் கறைதான் உள்ளது.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பே ஒரு நாடகம். வேளாண் மண்டத்தில் திருச்சி, அரியலூரை ஏன் சேர்க்கவில்லை. டெல்டா பகுதிகளில் ஏற்கனவே உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுக்க வேளாண் மண்டல சட்டத்தில் எதுவும் ஏன் சொல்லவில்லை.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 13 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால், இது வரை கட்டுமானப்பணிகளில் முன்னேற்றம் இல்லை.
மக்களுக்காக அதிமுக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதுதான் அதிமுக அரசின் சாதனை

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a reply