சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். பின்பு, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 9ம் தேதி வரை நடந்தது. சட்டசபையில் கடந்த 14ம் தேதியன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதன் மீது பொது விவாதம் நடத்தி சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வரும் 9ம் தேதி மீண்டும் சட்டசபை கூடுகிறது. இந்த தொடர் எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்கச் சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு இன்று(மார்ச்2) கூடியது. இதில், மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை சபை கூடுவதென்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டசபை மார்ச் 9ம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர் ப.சந்திரனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மறைந்த தற்போதைய உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவை ஒத்தி வைக்கப்படும். 10ம் தேதி விடுமுறை. 11ம் தேதியன்று வனத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் எடுத்து கொள்ளப்படும் துறைகள் வருமாறு:
12ல் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, 13ல் எரிசக்தித் துறை(மின்சாரம்), மதுவிலக்கு ஆயத்தீர்வை, 14, 15 விடுமுறை. 16ல் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, 17ல் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பணியாளர் நலன், 18ல் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, 19ல் கூட்டுறவு, உணவு பாதுகாப்புத் துறைகள், 20ல் நீதிநிர்வாகம், சட்டம், 21ல் சமூக நலம் மற்றும் சத்துணவு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, பிற்பட்டோர் நலத்துறை, 22 விடுமுறை.
23ல் வீட்டுவசதித் துறை, மசோதாக்கள் அறிமுகம், 24ல் தொழில்துறை, சிறுகுறுநடுத்த தொழில்கள், 26ல் கைத்தறி துணி நூல் துறை, செய்தித் துறை, 27ல் காவல் துறை, தீயணைப்புத் துறை, 28, 29 விடுமுறை. 30ல் காவல்துறை தொடர்ச்சி, வணிகவரி, முத்திரைத்தாள், பால்வளம். 31ல் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை.
ஏப்.1ல் தகவல் தொழில்நுட்பம், வருவாய்த்துறை, ஏப்.2ல் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஏப்.3ல் சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை, ஏப்.4ல் தொழிலாளர் நலன், ஏப்.5,ஏப்.6 விடுமுறை. ஏப்.7ல் போக்குவரத்துத் துறை, ஏப்.8ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தமிழ் வளர்ச்சித் துறை, ஏப்.9ல் பேரவை செயலகம், பொதுத் துறை, கவர்னர் மாளிகை நிர்வாகம் மற்றும் மசோதாக்கள் நிறைவேற்றம்.
இவ்வாறு சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கி நிறைவேற்றப்படுகின்றன.