ஏப்.14ல் புதிய கட்சி... மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி நாளை ஆலோசனை..

by எஸ். எம். கணபதி, Mar 4, 2020, 11:03 AM IST

வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

மழை வருமா, வராதா என்பதைப் போல நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்பதும் நீண்ட காலமாகப் பேசப்படும் விஷயமாக உள்ளது. 1996ம் ஆண்டில் அதிமுக ஊழல் ஆட்சியை எதிர்த்து, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி துணிச்சலாகப் பேசியது முதல் அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்று ரசிகர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

அதற்கு, இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் மட்டும், நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்... என்று வசனம் பேசி பதில் கொடுத்து வந்தார். கடைசியாகக் கடந்த 2017 டிசம்பர் 31ம் தேதியன்று அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று பேட்டி கொடுத்தார். அதற்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளையும் மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். மக்கள் மன்றச் சின்னமாக பாபா முத்திரை போல் ஒரு சின்னத்தைக் காட்டினார். அதன்பிறகு ஆன்மீக அரசியல் செய்யப் போவதாகக் கூறினார்.
ஆனாலும், அவர் பாஜகவுக்கு ஆதரவாகவும், குறிப்பாகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பாராட்டியும் பேசி வந்தார். கடைசியாக, அவர் பெரியாரை இகழும் வகையில் பேசியது திராவிட சிந்தனையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதற்குப் பின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசி வந்தார். முஸ்லிம் மதகுருமார்களே போராட்டத்தைத் தூண்டி வருவதாகவும் கூறினார். இதற்கு உலமாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதாகவும், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதாகவும் பதிலளித்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே இப்படி முன்னுக்குப் பின் முரணாக ரஜினி செயல்படுவதால், எப்போதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில், ரஜினி வரும் ஏப்ரல்14 புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும், ஆகஸ்டில் மாநாடு நடத்தப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், நாளை(மார்ச்5) காலை 10 மணிக்குச் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய கட்சியின் கொடி, பெயர், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி சேருவதா போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

You'r reading ஏப்.14ல் புதிய கட்சி... மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி நாளை ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை