தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த முருகன்?

by எஸ். எம். கணபதி, Mar 12, 2020, 09:16 AM IST

தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6 மாதங்களாக மாநில பாஜக தலைவர் பதவி காலியாகவே இருந்தது. இதற்கு உட்கட்சி தேர்தல் முடிந்த பின்பு, தேர்தல் மூலம் மாநில தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று காரணம் கூறப்பட்டது.

அச்சமயம், மூத்த தலைவர் இல.கணேசன், இடைக்காலத் தலைவரை நியமித்துத் தேர்தல் மூலமே மாநில தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். இதற்குப் பின்னர், மாநில தலைவர் பதவிக்குப் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், முருகானந்தம், சி.பி.ராதாகிருஷ்ணன் என்று பலருடைய பெயர்கள் அடிபட்டு வந்தன.
இந்நிலையில், பாஜக மாநில தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளதாகச் செயலாளர் அருண்சிங் தெரிவித்திருக்கிறார். இது தமிழக பாஜக நிர்வாகிகள் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிலருக்கு அதிருப்தியையும் கொடுத்திருக்கிறது.

புதிய தலைவர் முருகன், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை அம்பேத்கர் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்து விட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் பிராக்டீஸ் செய்து வந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை குறித்த முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர். தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

முரசொலி அலுவலகம் உள்ள இடம், பஞ்சமி நிலம் என்று பாஜக பிரமுகர் சீனிவாசன், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரை ஏற்று, உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியவர் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த முருகன்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை