சட்டசபை மீண்டும் கூடியது.. திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு..

by எஸ். எம். கணபதி, Mar 23, 2020, 14:03 PM IST

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், சட்டசபை இன்று கூடியது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இந்தியாவில் இன்று(மார்ச்23) காலை வரை 415 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், நூற்றுக்கணக்காணோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை ஆய்வு செய்து வெளியிட்ட அறிவிப்பின்படி நாடு முழுவதும் 82 மாவட்டங்களை மற்ற மாவட்டங்களுடன் தொடர்பு இல்லாமல் முடக்கி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்கள், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. முன்னதாக, திமுக கொறடா சக்கரபாணி, சட்டசபை வாயிலில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நேற்று ஊரடங்கு நடத்தப்பட்டது. இந்த சூழலில், சட்டசபைக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டுமென்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை அரசு ஏற்கவில்லை. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேர்வுகளைக் கூட தள்ளி வைக்கவில்லை. இந்த நிலையில், சட்டசபைக் கூட்டத் தொடரை திமுக புறக்கணிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் சட்டசபையைப் புறக்கணித்தன. இதனால், ஆளும் கட்சி உறுப்பினர்களை மட்டுமே கொண்டு இன்று சட்டசபை நடைபெற்றது.

READ MORE ABOUT :

Leave a reply