ஊரடங்கு ஏப்.14 வரை நீட்டிப்பு.. காய்கறி, மளிகைக் கடைகள் திறப்பதற்கு அனுமதி

TamilNadu Hotels, Groceries shops runs 24 hours a day

by எஸ். எம். கணபதி, Mar 27, 2020, 10:17 AM IST

இம்மாதம் 31ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்.14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், காய்கறி, மளிகைக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல்14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்க்கவும், அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி அல்லது வாராந்திர அல்லது மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும். காய்கறி மார்க்கெட் அல்லது சந்தைகளில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி மற்றும் பழங்கள் விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும்.

மேலும், சமுதாய விலகல் முறைப்படி மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும் சமூக விலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.குடிசை மாற்று குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு வாகனங்களின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.
இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதையும், மக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்.ஐ.வி. தொற்று உள்ளோர் போன்றவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் அவற்றை கொண்டு செல்வதற்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும்.மின்வணிக நிறுவனங்களான (இகாமர்ஸ்) குரோபர்ஸ், அமேசான், பிக் மார்க்கெட், பிலிப்கார்ட், டங்சோ போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும், அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது.சொமாட்டோ, ஸ்விக்கி, ஊபர், ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே தயாரித்த உணவுப் பொருட்களை விநியோகம் செய்யத் தடை தொடரும். காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும். வேளாண் விளை பொருட்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படுகிறது.

கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றைக் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், காவல்துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை 044- 28447701, 044-28447703 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் 108 எண்ணை தொடர்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இச்சேவையையும் இணைந்து செயல்பட வேண்டும்.அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளை சென்றடைவதையும், இவை வழங்கும்போது சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அந்தந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்றவாறு, தேவைப்பட்டால் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை அவரவர் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாவட்ட கலெக்டர்கள் ஏற்பாடு செய்யலாம். வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேரின் பட்டியல் மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை, அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.கொரோனா தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குடும்பத்தினர் வெளியில் வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட கலெக்டர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளும், பொது மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்படுபவை. இதனை உணர்ந்து, அரசின் உத்தரவுகளை பொது மக்கள் தவறாது தீவிரமாக கடைபிடித்து, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.“விழித்திரு, விலகி இரு, வீட்டிலேயே இரு” என்ற கோட்பாட்டை இந்த சவாலான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading ஊரடங்கு ஏப்.14 வரை நீட்டிப்பு.. காய்கறி, மளிகைக் கடைகள் திறப்பதற்கு அனுமதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை