சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கொரோனா நோய்க்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாகக் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை (புதிய தலைமைச் செயலகக் கட்டிடம்), கொரோனா சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தனி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள இதற்கு, தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் சார்பில் ரூ.10 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த மருத்துவமனையில் 24 மணி நேரக் காய்ச்சல் புற நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் செயல்படவிருக்கிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு சிகிச்சைக்காக வசதியாக, 200 மருத்துவர்கள், 200 செவிலியர்கள், 100 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 180 தூய்மை பணியாளர்கள், 40 பாதுகாவலர்களை பணியமர்த்தவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.