அரை மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்யும் துரித பரிசோதனை கருவிகள் 50 ஆயிரம் இன்றிரவுக்குள் வரும் என்று முதல்வர் தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
விமான நிலையங்களில் இது வரை 2 லட்சத்து 10,538 பேருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. வீடுகளிலேயே 92,814 பேர் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தமிழக அரசு லேப் 12, தனியார் லேப் 7 என மொத்தம் 19 ஆய்வுக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இது வரை 6,095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 738. மேலும் 344 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது. இது வரை 21 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழகத்தில் தற்போது 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. அதேபோல், அரசு மருத்துவமனைகளில் 22,049 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 10,322 படுக்கைகளும் தயாராக உள்ளன.
உடல் பாதுகாப்பு உடைகள், காய்ச்சல் உள்ளிட்ட மருந்துகள், முகக்கவசங்கள் அனைத்தும் போதிய அளவு உள்ளன.மேலும், 2500 வெண்டிலேட்டர் பெறுவதற்குக் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 4 லட்சம் துரித சோதனை உபகரணங்கள்(ரேப்பிட் டெஸ்டிங் கிட்ஸ்) வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 50000 கருவிகள் இன்று வந்துவிடும். மேலும், 20,000 உபகரணங்கள் மத்திய அரசு வழங்குகிறது.
குடும்ப அட்டைக்கு அரிசி மற்றும் நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.